Sunday, February 6, 2011

அழைப்பு ......

காலையில் ஒலித்த அலார ஓசையில் திடுக்கிட்டு எழுந்தான் கவிவர்மன். அவசர அவசரமாக தனது காலைக் கடன்களை முடித்துக் கொண்டு வேலைக்குப் புறப்பட்டான். அவன் தினமும் பாரிட் புந்தாரிலிருந்து பினாங்கிற்கு வேலைக்குச் செல்ல வேண்டும். தான் நிம்மதியாக இருக்கும் இடம் தனது மகிழுந்து ஒன்றுதான் என் நினைப்பவன். அவன் வீட்டை விட்டு வெளியேறிய முப்பாதவது நிமிடத்தில் அவனது கைத்தொலைபேசி ஒலித்தது. எடுத்து பார்த்தான். தமிழழகி எனும் பெயர் தென்பட்டது. உடனே அவன் முகம் வாடினான்.

தமிழழகி கவிவர்மனின் மனைவி. பெற்றோர்களின் வற்புறுத்தலால்தான் கவிவர்மன் அவளை மணந்து கொண்டானே தவிர உண்மையான அன்பினால் அல்ல. அவள் பெயரைப் பார்த்தவுடன் " இப்பதான் வீட்டுல இருந்து கிளம்பினேன். அதுக்குள்ளே இதுக்கு என்ன வந்துச்சோ" என சளித்துக் கொண்டான். அவள் அழைப்பைப் பொருட்படுத்தாமல் தொடர்பைத் துண்டித்தான். "மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் " என்று மின்னல் FM ல் ஒலித்தப் பாடலை தானும் முனுமுனுத்துக் கொண்டே சென்றான்.

பினாங்கு பாலத்தை நெருங்கியவுடன் வாகன நெரிசல் ஆரம்பமானது. வாகனங்கள் ஒவ்வொன்றும் ஒன்றன் பின் ஒன்றாக ஆமையை விட மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தன. கவிவர்மன் தன் கைகடிகாரத்தைப் பார்த்தான். இன்னும் அரை மணி நேரத்தில அவனது அலுவலக நேரம் ஆரம்பமாகி விடும். " மணி வேற ஆகுது. இவனுங்க வேற இப்படி பண்ணறானுங்க " என கோபத்தில் பல்லைக் கடித்துக் கொண்டான். அந்நேரத்தில் மறுபடியும் கைத்தொலைபேசியில் அழைப்பு வந்தது. எடுத்துப் பார்த்தான். அவன் கோபம் அதிகரித்தது. மீண்டும் தமிழழகி. அழைப்பைத் துண்டித்து விட்டு ஒருவழியாக தனது அலுவலகத்தை வந்தடைந்தான்.

நேரமாகி விட்டதே எனும் பதற்றத்தோடு சென்ற கவிவர்மனுக்கு இன்ப அதிர்ச்சி காத்துக் கொண்டிருந்தது. அனைவரும் அவனுக்குப் பூச்செண்டுகள், பூமாலைகள், வாழ்த்துகள் என மாறி மாறி அளித்தனர். கவிவர்மன் செய்வதறியாது விழித்தான். " டேய், கதிர் என்னடா நடக்குது இங்க.ஏன் எல்லாரும் எனக்கு வாழ்த்து சொல்றாங்க?" எனக் கேட்டான். " அதுவா, இன்னும் கொஞ்சம் நேரத்துல தெரியும் பாரு " என்று கதிர் சொல்லி முடிப்பதுற்கள் மைதிலி அங்கு வந்து " கவி.. உன்னை போஸ் கூப்டறாரு" என்றாள். கவிவர்மனோ தன் மனதில் பல வினாக்களை முனுமுனுத்துக் கொண்டே போனான்.

"மேய் ஐ கமிங் சார் " எனக் கவிவர்மன் கதவின் ஓரம் நின்றுக் கேட்டான். " யெஸ் மைய் டியர் போய் " என போஸ் திரு மணியம் சொன்னார். உள்ளே சென்றவுடன் தனக்கு பதவி உயர்வு கிடைத்திருப்பதை அறிந்து கொண்டான். சந்தோஷமாக பேசிக் கொண்டிருக்கும் வேளையில் தமிழழகியிடமிருந்து மீண்டும் அழைப்பு வந்தது. " சந்தோஷமா இருந்தா இதுக்கு ஆகாதே" என மனதுக்குள்ளே கடிந்து கொண்டான். அழைப்பைத் துண்டித்து தன் கைதொலைபேசியை முடக்கி வைத்தான். மீண்டும் திரு மணியத்திடம் தனது உரையாடலைத் தொடர்ந்தான். அவர் ஓர் உறையில் பதவி உயர்வுக்கான கடிதத்தைக் கொடுத்து வாழ்த்து சொன்னார். அந்த உறையில் கடிதம் மட்டுமல்ல ஒரு சாவியும் இருந்தது. ஆம். அலுவலகம் அவனுக்கு கொடுக்கும் புதிய மகிழுந்தின் சாவிதான் அது. கவிவர்மன் போஸ்க்கு நன்றிக் கூறி ஆவலுடன் வெளியே சென்றுப் பார்த்தான். அவனுக்காகவே "சுவிவ்ட் சூசுக்கி" நின்றுக் கொண்டிருந்தது. அளவிலா ஆனந்தம் அடைந்தான். வாழ்க்கையிலேயே இன்றைய நாள்தான் இன்பமான நாள் எனக் கருதினான்.

தனது நண்பர்களை அழைத்துக் கொண்டு புதிய மகிழுந்தில் ஊர்வலம் வந்தான். வாழ்வே சொர்கமாகத் தெரிந்தது அவனுக்கு. " டேய், புது கார் கிடச்சிருக்கு எங்களுக்கு ஏதும் இல்லையாட" எனக் கதிர் கேலியாக கேட்டான். "அதுக்கென்னடா அப்புறம் எந்திரன் படம் பார்க்க போலாம்டா. பிறகு சாப்பிட போலாம். எல்லா செலவும் நான் செய்யரேண்டா" எனக் கவிசர்மன் பூரிப்புடன் சொன்னான். பிறகு ஔவலாக தொலைபேசியின் மூலம் அனைவருக்கும் இவ்விஷயத்தை தெரிவித்தான். மாலை மணி 5 ஆனதும் அலுவலகத்தை விட்டு புறப்பட்டனர். கவிவர்மனும் கதிரும் தேநீர் அருந்த அருகில் இருக்கும் நாசி கண்டார் கடைக்குச் சென்றனர். மற்ற நண்பர்கள் வீட்டுக்குச் சென்று உடை மாற்றி விட்டு வருவதாகக் கூறி சென்றனர். அப்போது "எப்படா நீ அப்பா ஆகப் போற" எனக் கதிர் கவிவர்மனைக் கேட்டான். "இன்னும் ரெண்டு வாரம் இருக்குடா. எப்படா அந்த நாள் வரும்னு இருக்கு. ரொம்ப ஆசையா இருக்கேண்டா. அந்த முட்டாள கல்யாணம் செஞ்சதுக்கு இது ஒன்னுதான் புரோஜனம் " என்று கவிவர்மன் தனது உள்மனது வார்த்தைகளை வெளியிட்டான். அப்போது கதிரின் தொலைப்பேசிக்கு ஓர் அழைப்பு வந்தது. தமிழழகிதான் அவனுக்கும் அழைப்புக் கொடுத்தவள். " உன் வீட்டிலிருந்துதாண்டா. பேசவா வேணாமா" என்று கதிர் கவ்விவர்மனைப் பார்த்துக் கேட்டான். "அது உன்னையும் தொந்தரவு பண்ணுதா. பேசாமல் உன் தொலைபேசியை முடக்கி வை" என்று சற்று உரத்தக் குரலில் கூறினான் கவிவர்மன்.

சிலநிமிடங்கள் கழித்து, மற்ற நண்பர்கள் வந்தவுடன் மகிழுந்து திரையரங்கை நோக்கிப் பறந்தது. படம் ஆரம்பித்தது." எத்தனை பேர் வந்தாலும் நம்ம சூப்பர் ஸ்டார கவுக்க முடியாதுடா" எனக் கவிவர்மன் தன் நண்பர்களிடம் பெருமிதத்தோடு கூறினான். படத்தின் ஓட்டத்தில் அனைவரும் மூழ்கினர். படம் முடிந்தது. அனைவரும் சிற்றுண்டிக்காக தாஜ் உணவகத்திற்குச் சென்றனர். அலுவலகத்தில் நடக்கும் கேளிக்கையான நிகழ்வுகள் படத்தில் இருந்த சிறந்த காட்சிகள் எனப் பல விஷயங்களைப் பற்றி பேசிக் கொண்டே உண்டனர். கதிர் சொன்ன நகைசுவைகளை கேட்டு நண்பர்கள் சிலர் கண்களில் தண்ணீரே வந்து விட்டது.

மணி நள்ளிரவு 3 ஆனது. அனைவரும் விடைப்பெற்றுக் கொண்டு அவரவர் வீட்டுக்குச் சென்றனர். கவிவர்மனும் தனது வீட்டை நோக்கி விரைந்தான். தனது கைத்தொலைப்பேசி முடக்கி வைத்திருப்பது அப்போதுதுதான் அவனுக்கு நினைவிற்கு வந்தது. உடனே அதை எடுத்து திறந்தான். திறந்தவுடனேயே தவறிய அழைப்புகள் எனும் குறுஞ்செய்தி வந்தது. சற்றே அதிர்ந்தான். தமிழழகியிடமிருந்து 53 அழைப்புகள். பதற்றமடைந்தான். மகிழுந்தை வேகமாக செலுத்தினான். வழியில் ஒரு சாலை விபத்து வேறு அவனை தாமதப்படுத்தியது. வீட்டை வந்தடைய காலை மணி 4.30 ஆகி விட்டது.

வீட்டின் முன் சென்று ஹோன் அடித்தான். தமிழழகி வரவில்லை. மகிழுந்துவிலிருந்து இறங்கினான். பல நாட்கள் கழித்து தன் மனைவியின் பெயரை உச்சரித்தான்." தமிழழகி....தமிழழகி....." என அழைத்தான். அவள் வரவே இல்லை. தன் மகிழுந்தில் இருக்கும் மாற்று சாவியை எடுத்தான். வீட்டை திறந்து அவசர அவசரமாக உள்ளே சென்றான். மின்விசிறி ஓடிக்கொண்டிருந்தது. தொலைக்காட்சி திறந்தப்படியாகவே இருந்தது. அவன் நேரே தன் அறைக்குச் சென்றான். அங்கே..அந்தக் காட்சியைக் கண்டு அதிர்ந்தான்; பயந்தான்; நடுங்கினான்; அவன் உடல் வியர்வையால் நனைந்தது; அழுதான்; கதறினான். செய்வதறியாது தடுமாறினான். தான் செய்த தவற்றை எண்ணி மனம் குமுறினான். தரையில் சாய்ந்தான். தமிழழகியிடமிருந்து வந்த அழைப்பை உதாசினம் படுத்தாமல் இருந்திருந்தால் இப்படி நடந்திருக்காதே எனப் புலம்பினான். எந்த நாள் வாழ்விலே இன்பமான நாளாக கருதினானோ அந்த நாளே அவன் வாழ்க்கையின் கருப்பு அத்தியாயமாகி விட்டது.

நிமிர்ந்து பார்த்தான்,கையில் தொலைபேசியுடன் இரத்த வெள்ளத்தில் தமிழழகி. அவள் காலடியில் இன்னும் இப்பூவுலகைக் கண் திறந்து பார்க்காத சிசுவின் பிணம். அன்று கண்ணிர் விட ஆரம்பித்தவன் நிறுத்தவே இல்லை. இன்னும் அழுதுக் கொண்டிருக்கிறான் அவர்களின்
கல்லறையின் பக்கத்தில்.

**கவிவர்மன்** http://blog.tamilish.com/pakkam/5